search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் தேர்தல்: ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றிய மோர்பி ஹீரோ வெற்றி
    X

    குஜராத் தேர்தல்: ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றிய "மோர்பி ஹீரோ" வெற்றி

    • மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அம்ருதியா அனைவராலும் பாராட்டப்பட்டார்.
    • எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் படேல் ஜெயந்திலால் 52 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், தொங்கு பாலம் விபத்துக்குள்ளான மோர்பி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக படேல் ஜெயந்திலால், பாஜக வேட்பாளராக கான்டிலால் அம்ருதியா உள்ளிடோர் போட்டியிட்டனர். இதில், 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அம்ருதியா வெற்றி பெற்றார். அம்ருதியா ஒரு லட்சத்து 14 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 52 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.

    1995, 1998, 2002, 2007, 2012 ஆகிய 5 முறை மோர்பி தொகுதியில் அம்ருதியா வெற்றி பெற்றவர். எனினும் கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அரசியலில் இருந்து மறக்கப்பட்டிருந்த அம்ருதியா, மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த வீடியோ மோர்பி பால விபத்து காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. இதுவே இவரது வெற்றிக்கான காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

    ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கட்ந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 7 மாத சீரமைப்புப் பணிகள் முடிந்து அக்டோபர் 26ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் திறக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×