என் மலர்
இந்தியா
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
- ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
- கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
புதுடெல்லி :
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 4 லட்சம் ஆகும். அவற்றில், கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.