என் மலர்
இந்தியா

பீகார் இல்லையென்றால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்- கேந்திரிய வித்யாலயா ஆசிரியை சர்ச்சை பேச்சு

- பீகாரின் நிலைமை உண்மையில் மோசமாக உள்ளது.
- பீகார் மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை.
"பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்" என கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை தீபாலி பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆசிரியை தீபாலி அந்த வீடியோவில், "இந்தியா முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. என்னை இந்தியாவில் எதாவது ஒரு ஊரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக சேர்த்திருக்கலாம்.
கொல்கத்தாவை பலருக்கும் அவ்வளவாக பிடிக்காது. ஆனால் நான் அங்கு செல்லவும் தயாராக இருந்தேன். மேற்குவங்கத்தில் எங்கு வேலைக்கு சேர்ந்திருந்தாலும் பரவாயில்லை. எனது நண்பர் டார்ஜிலிங்கில் பணியமர்த்தப்பட்டார், உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மற்றொரு நண்பர் வடகிழக்கில் உள்ள சில்சாரில் பணியமர்த்தப்பட்டார். இன்னொரு நண்பர் பெங்களூரில் இருக்கிறார். ஆனால் ஒரு மோசமான மாநிலத்தில் (பீகாரில்) என்னை பணியமர்த்தியதற்கு என் மேல் அவர்களுக்கு என்ன விரோதம்?
என்னுடைய முதல் பணி என்றும் என் நினைவில் இருக்கும். என்னை கோவாவிலோ ஒடிசாவிலோ அல்லது தென்னிந்தியாவில் எதாவது ஒரு பகுதியில் பணியமர்த்திருக்கலாம். ஏன் யாரும் செல்ல விரும்பாத லடாக்கில் கூட பணியமர்த்திருக்கலாம். நான் அங்கு கூட செல்ல தயாராகவே இருந்தேன்.
நான் கேலி செய்யவில்லை, பீகாரின் நிலைமை உண்மையில் மோசமாக உள்ளது. நான் இங்கே இருப்பதால், அதை தினமும் பார்க்கிறேன். பீகார் மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. பீகார் இருப்பதால் இந்தியா இன்னும் வளரும் நாடாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்" என்று பேசியுள்ளார்.
ஆசிரியை தீபாலி பேசிய வீடியோ வைரலாக, பீகார் எம்பி சாம்பவி சவுத்ரி, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் ஆணையருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.