search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்கள் வெள்ளத்தில் தஹி ஹண்டி திருவிழா: பல அடுக்கு பிரமிடு அமைத்து அசத்திய இளைஞர்கள்
    X

    மக்கள் வெள்ளத்தில் 'தஹி ஹண்டி' திருவிழா: பல அடுக்கு பிரமிடு அமைத்து அசத்திய இளைஞர்கள்

    • அரசியல் கட்சியினர் தஹி ஹண்டி கொண்டாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர்.
    • ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களும் பல அடுக்கு பிரமிடுகளை அமைத்து தயிர் பானையை உடைத்தது அசத்தினர்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் குறிப்பாக தலைநகர் மும்பையில் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது.

    விநாயகர் சதுர்த்தி, தஹி ஹண்டி என பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெறும் தஹி ஹண்டி என அழைக்கப்படும் தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தஹி ஹண்டி கொண்டாட்டம் பெரிய அளவில் நடைபெறவில்லை. எனவே 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து நேற்று நகரில் தஹி ஹண்டி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது. மும்பை, தானேயில் நேற்று அரசியல் கட்சிகள், அமைப்பினர், பொது மக்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் தஹி ஹண்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    குறிப்பாக மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சியினர் தஹி ஹண்டி கொண்டாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். அவர்கள் கோவிந்தாக்களுக்கு (தயிர்பானை உடைக்கும் குழுவினர்) பரிசுகளை அள்ளி கொடுத்தனர். எனவே வண்ண சீருடை அணிந்த கோவிந்தா குழுக்கள் நேற்று காலை முதலே வாகனங்களில் மும்பை, தானே பகுதிகளை சுற்றி வந்தனர்.

    அவர்கள் தஹி ஹண்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தயிர் பானைகளை உடைத்து அசத்தினர். மேலும் பரிசுகளை அள்ளி சென்றனர். இதன் காரணமாக நேற்று மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களும் பல அடுக்கு பிரமிடுகளை அமைத்து தயிர் பானையை உடைத்தது அசத்தினர்.

    தானே டெம்பி நாக்காவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் பிரமாண்டமான தஹி ஹண்டி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கோவிந்தாக்கள் கலந்து கொண்டு மனித பிரமிடு அமைத்து அசத்தினர். குறிப்பாக கோவிந்தாக்கன் 9 அடுக்கு வரை பிரமிடு அமைத்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். மேலும் அவர்கள் பிரமிடை கலைக்க சீட்டு கட்டுபோல ஒரே நேரத்தில் சரிந்து விழும் காட்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

    ஏக்நாத் ஷிண்டே ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் நடிகை ஷரத்தா கபூர் கலந்து கொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினார்.

    இதுதவிர தானேயில் பல்வேறு இடங்களில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களால் பிரமாண்ட தஹி ஹண்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல ஒர்லியில் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் ஏற்பாட்டில் நடந்த தஹி ஹண்டி நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். இதேபோல தாதர் சிவாஜி பார்க்கில் சேனா பவன் முன், சிவசேனா சார்பில் விசுவாச தஹி ஹண்டி நிகழ்ச்சிகள் நடந்தன. ஒர்லியில் சிவசேனா சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார்.

    இதேபோல மும்பை, தானேயின் பல்வேறு பகுதிகளில் தஹி ஹண்டி கொண்டாட்டங்கள் நடந்தன. ஒரு சில இடங்களில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினர்.

    மும்பை, தானே மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் தஹி ஹண்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கலாசார திருவிழாவாக மக்கள் கொண்டாடினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதால், இதில் மக்கள் கூடுதல் உற்சாகத்தை காட்டினர்.

    முன்னதாக தஹி ஹண்டிக்கு மனித பிரமிடு அமைத்து தயிர் பானை உடைக்கும் நிகழ்வை சாகச விளையாட்டில் மாநில அரசுக்கு சேர்க்கும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து இருந்தார். இதன் மூலம் கோவிந்தாக்கள் விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலையில் சேர முடியும். மேலும் உயிரிழப்பு, காயம் ஏற்பட்டால் அரசின் நிவாரணமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×