என் மலர்
இந்தியா
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் எம்.பி.
- கும்பமேளாவிற்கு வரும் சாதாரண மக்கள் எந்தவொரு சிறப்பு வசதிகளையும் பெறவில்லை.
- கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடினர் என பொய் சொல்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
ஆனால் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசிக்கும்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் கும்பமேளா கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் எதிரொலித்தது.
இந்த நிலையில் கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன் கூறியதாவது:-
இப்போது தண்ணீர் மிகவும் மாசுப்பட்ட இடம் எது?. அது கும்பமேளா நடைபெறும் இடம். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது. இதனால் ஆற்று தண்ணீர் மாசுப்பட்டுள்ளது.
#WATCH | Delhi: Samajwadi Party MP Jaya Bachchan says, "... Where is the water most contaminated right now? It's in Kumbh. Bodies (of those who died in the stampede) have been thrown in the river because of which the water has been contaminated... The real issues are not being… pic.twitter.com/9EWM2OUCJj
— ANI (@ANI) February 3, 2025
உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. கும்பமேளாவிற்கு வரும் சாதாரண மக்கள் எந்தவொரு சிறப்பு வசதிகளையும் பெறவில்லை. அவர்களுக்காக எதுவும் தயார் செய்யப்படவில்லை. கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடினர் என அவர்கள் பொய் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் எப்படி அந்த இடத்தில் கூட முடியும்?.
இவ்வாறு ஜெயா பச்சன் கூறினார்.
மவுனி அமாவாசையையொட்டி 5 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.