search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் ஆணையத்தை பார்த்து சிரிப்பதா? அழுவதா?.. மோடியை எதிர்த்த காமெடி கலைஞர் வேட்புமனு நிராகரிப்பு
    X

    'தேர்தல் ஆணையத்தை பார்த்து சிரிப்பதா? அழுவதா?'.. மோடியை எதிர்த்த காமெடி கலைஞர் வேட்புமனு நிராகரிப்பு

    • பாஜக வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • வேட்புமனு நிராகரிப்பால் எனது மனம் உடைந்திருக்கலாம் அனால் எனது தைரியம் உடையாது. வாரணாசியில் இன்று என்னடையதையும்ம சேர்த்து 32 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் மொத்தமாக எண்ணப்பட உள்ளது. பாஜக வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முந்தினம் (மே 14) பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் பிரபல நகைச்சுவைக் கலைஞர் சியாம் ரங்கீலா நேற்று (மே 15) வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமானவர் இவர்.

    ஆரம்ப காலங்களில் 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு தீவிர ஆதரவாளராக இருந்த சியாம் ரங்கீலா அதன்பின்னர் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து தனது நிகழ்ச்சிகளிலும், பொதுவெளியிலும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இவரது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் வாரணாசியில் எதிர் வேட்பாளர் இல்லாமல் மோடி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று தான் அவரை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உறுதிமொழி படிவத்தை நிரப்பவில்லை எனக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வேட்புமனு நிராகரிப்பால் எனது மனம் உடைந்திருக்கலாம் அனால் எனது தைரியம் உடையாது. வாரணாசியில் இன்று என்னடையதையும் சேர்த்து 32 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணயத்தைப் பார்த்து சிரிப்பதா?அழுவதா? என்று தெரியவில்லை. மோடி நடிக்கவும் அழுகவும் செய்யலாம், ஆனால் நான் அழப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×