search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்கிறார்: பெண் டாக்டரின் பெற்றோர் குற்றச்சாட்டு
    X

    முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்கிறார்: பெண் டாக்டரின் பெற்றோர் குற்றச்சாட்டு

    • கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் தொடர்ந்து அரசு மற்றும் போலீஸ் மீது குற்றச்சாட்டு.
    • பணம் தர முன்வந்ததாகவும், தாங்கள் அதை மறுத்ததாகவும் பெற்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே சோகத்தில் உலுக்கியது. தற்போது பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

    போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேற்கு வங்க போலீசார் தொடக்கத்தில் இருந்தே தங்கள் மகள் கொலையை மூடி மறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பணம் தர முயன்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

    இதற்கிடையே மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இழப்பீடு தொடர்பாக பணம் தருவதாக பெண் டாக்டரின் பெற்றோரிடம் கூறவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "பெண் டாக்டர் குடும்பத்தினருக்கு பணம் (இழப்பீடு) கொடுக்க நான் ஒருபோதும் முன்வரவில்லை. அவதூறைத் தவிர இது வேறு ஏதுமில்லை. பெற்றோர்கள் பெண் டாக்டர் நினைவாக

    ஏதாவது செய்ய விரும்பினால், அரசு அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதை மட்டும்தான் தெரிவித்தேன்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் முன்வந்தார். ஆனால், துர்கா பூஜையின்போது சட்டம் ஒழுங்கை பற்றி நன்கு அறிந்தவர் எங்களுக்கு தேவை" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாக பெண் டாக்டரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் "முதல்வர் மம்தா பானர்ஜி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை. அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா?.

    நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார். மேலும், உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் எனவும் தெரிவித்தார். நீதி கிடைத்த பிறகு உங்களுடைய அலுவலகம் வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தோம்" என்றனர்.

    பெண் டாக்டர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

    Next Story
    ×