search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயில்வே கேட் மீது மோதிய டிராக்டர்.. அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய ரெயில் விபத்து தவிர்ப்பு
    X

    ரெயில்வே கேட் மீது மோதிய டிராக்டர்.. அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய ரெயில் விபத்து தவிர்ப்பு

    • கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார்.
    • ரெயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட் மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    பொகோரோ:

    ஜார்க்கண்ட் மாநிலம் பொகோரா மாவட்டம், போஜுதிஹ் ரெயில் நிலையம் அருகே சந்தால்டிஹ் ரெயில்வே கிராசிங் உள்ளது. நேற்று மாலையில் அந்த வழித்தடத்தில் டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங் மூடப்பட்டது. ரெயில் வந்துகொண்டிருந்தசமயத்தில், அந்த கிராசிங்கின் கேட்டில் ஒரு டிராக்டர் திடீரென மோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரெயில் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    ரெயில்வே கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார். அந்த டிராக்டர், ரெயில்வே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட் மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நிகழ்ந்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்று சரக்கு ரெயில் மீது மோதியது. இதன் காரணமான தடம்புரண்ட ரெயில் பெட்டிகள், அருகில் இருந்த தண்டவாளத்தில் சிதறி விழ, அந்த பாதையில் வந்த மற்றொரு விரைவு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    Next Story
    ×