search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் பதற்றம்: மேலும் 10,000 வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு - நிலவரம் இதுதான்
    X

    மணிப்பூர் பதற்றம்: மேலும் 10,000 வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு - நிலவரம் இதுதான்

    • சிஆர்பிஎஃப் நடத்திய என்கவுன்டரில் 10 பேர் கொல்லப்பட்டனர்
    • அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை இட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மத்திய அரசு மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் உள்ளதாக தலைமை பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். மாநில தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங்,

    மணிப்பூரில் ஏற்கனவே உள்ள படைகளுடன் 10,800 வீரர்களைக் கொண்ட மேலும் 90 கம்பெனி மத்தியப் படைகள் சேர்க்கப்பட உள்ளது என்றும் அந்த வகையில் மணிப்பூரில் உள்ள கம்பெனி படைகளின் எண்ணிக்கை மொத்தம் 288 ஆக உயரும் என்று தெரிவித்தார்.

    இந்த 90 படைகளில் ஏற்கனவே கணிசமாக பகுதியினர் இம்பால் வந்தடைந்துள்ளனர். மக்களின் உயிரையும் உடைமைகளைப் பாதுகாக்க, அதிக பதற்றம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட படைகளை அனுப்புகிறோம் என்று குல்தீப் சிங் கூறியுள்ளார். அனைத்து பகுதிகளையும் ஒரு சில நாளில் முற்றிலுமாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), ராணுவம், அசாம் ரைபிள்ஸ், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் சஷாஸ்த்ரா சீமா பால் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

    நவம்பர் 7 அன்று ஜிரிபாமின் ஜைரான் கிராமத்தில் ஹ்மார் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மெய்தேய் போராளிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. இதற்கு பதிலடியாக 20க்கும் மேற்பட்ட குக்கி போராளிகள் நவம்பர் 11 அன்று ஜிரிபாமின் போரோபெக்ராவைத் தாக்கினர்.

    சிஆர்பிஎஃப் நடத்திய என்கவுன்டரில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீதி இருந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு தப்பினர். அதற்கு முன்னதாக அந்த கிராமத்தில் 2 மெய்தேய் முதியவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே ஒரு கைக்குழந்தை உட்பட ஆறு பிணைக் கைதிகளின் உடல்கள் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன. இதனால் மக்கள் வீதியில் இறங்கி அரசியல்வாதிகள் வீட்டை சூறையாடுவது, முதல்வர் வீட்டை முற்றுகை இடுவது என கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை இட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 2023 முதல் மணிப்பூர் வன்முறையில் 258 பேர் இறந்துள்ளனர். போலீசிடம் இருந்து திருடப்பட்ட 3000 ஆயுதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×