search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இனமோதல்களுக்கு மத்தியில் மணிப்பூர் அரசு மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கை
    X

    இனமோதல்களுக்கு மத்தியில் மணிப்பூர் அரசு மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கை

    • சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
    • பயோமெட்ரிக் தரவுகளை சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. மே 3ம் தேதி ஆரம்பித்த வன்முறையின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இந்த வன்முறையுடன் போதைப்பொருள் பயங்கரவாதம், மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், காடுகளில் நடக்கும் போதைப்பொருள் சாகுபடி, கடத்தல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

    இந்நிலையில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு சேகரிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மியான்மர் குடியேறிகளின் பயோமெட்ரிக் தரவுகள் முழுமையாக பெறப்படும்வரை அனைத்து மாவட்டங்களிலும் பயோமெட்ரிக் இயக்கம் தொடரும். இப்பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத மியான்மர் குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை பெறுவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் குழுவை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது என்று உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மணிப்பூர் மற்றும் மிசோரம் அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    குகி சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர், தோட்டா மற்றும் வெடிமருந்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    காடுகள் அழிப்பு, போதைப்பொருள் சாகுபடி மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு மியான்மர் குடியேறிகளே காரணம் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×