என் மலர்
இந்தியா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
- இட்டுக்கட்டிய புகாரில் மணீஷ் சிசோடியாவை கைது செய்து, தனிநபர் சுதந்திரத்தை மீறி உள்ளது வேதனை தருகிறது.
- விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது மட்டுமே ஏவப்பட்டு வருகின்றன.
சென்னை:
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை விடுவிக்க வேண்டும் என கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
'டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய புகாரில் கைது செய்து, தனிநபர் சுதந்திரத்தை மீறி உள்ளது வேதனை தருகிறது. அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டு வழக்கமான சட்ட நடைமுறைகள், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் தனிப்பட்ட மனநிறைவுக்காக மீறப்பட்டிருக்கின்றன. விசாரணை அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஆயுதமாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது மட்டுமே ஏவப்பட்டு வருகின்றன.
சட்ட நடைமுறை, அரசியல் சட்ட அடிப்படை கொள்கைகளை கொச்சைப்படுத்தி கைது செயய்ப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்', என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.






