என் மலர்
இந்தியா
மன்மோகன் சிங் நினைவிடத்துக்கு நிலம் ஒதுக்கிய மத்திய அரசு
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் கடந்த டிசம்பரில் காலமானார்.
- அவருக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த டிசம்பரில் காலமானார்.
மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே அவருக்கு நினைவிடம் அமைப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என குறிப்பிட்டிருந்தார். மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்கவேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்க அரசு இடம் ஒதுக்கும். இதுகுறித்து அவரது குடும்பத்துக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்டுவதற்காக மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கு ராஜ்காட் வளாகத்தில் நிலம் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நினைவிடத்துக்கு அருகில் இடம் ஒதுக்கப்படும். அவரது குடும்பம் ஒரு அறக்கட்டளையை உருவாக்குவதற்காக அரசாங்கம் காத்திருக்கிறது. அது உருவாக்கப்பட்டவுடன் நிலம் ஒதுக்கப்படும். நினைவிடம் கட்ட அறக்கட்டளைக்கு அரசு ரூ.25 லட்சம் வழங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.