என் மலர்
இந்தியா

'பொய் வாக்கு கொடுத்து பாலியல் வன்கொடுமை' செய்ததாக திருமணமான பெண் புகாரளிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

- கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞன் தனது வீட்டிற்கு வருவார்
- இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசம் சத்தர்பூரில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர், தன்னை பக்கத்து வீட்டை சேர்ந்த வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தித்தார்.
இதைத்தொடர்ந்து வீரேந்திர யாதவ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தன் மீதான எப்ஐஆரை எதிர்த்து வீரேந்திர யாதவ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.பாட்டி அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வீரேந்திர யாதவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி, திருமணமான ஒரு பெண், பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாகக் கூற முடியாது என்று வாதிட்டார்.
பதிவுசெய்யப்பட்ட எப்ஐஆரில் புகார் கொடுத்த பெண்ணுடைய வாக்குமூலத்தை நீதிபதி ஆராய்ந்தார். அதில், இளைஞனுடன் மூன்று மாதங்களாக தான் உறவு கொண்டிருந்ததாக அப்பெண் விவரித்துள்ளார். தனது கணவர் இல்லாத போதெல்லாம் இளைஞன் தனது வீட்டிற்கு வருவார் என்றும், அவர்கள் ஒருமித்த உடல் உறவுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் உறவில் வற்புறுத்தலோ அல்லது கட்டாயப்படுத்தலோ இல்லை எனவும் அந்த பெண்ணே கூறியுள்ளார். இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்தப் பெண் பொய்யான வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதற்கான நேரடி அறிகுறி எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதி திருமணம் ஆன பெண்ணுக்கு பொய்யான திருமண வாக்குறுதியை அளித்து உடல் உறவுக்கு மனுதாரர் சம்மதம் பெற்றார் என்பது தவறான புரிதல் என கூறி அவர் மீதான எப்ஐஆரை ரத்து செய்து இளைஞனை விடுவிக்க உத்தரவிட்டார்.