search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கூகுள்-பே மூலம் லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரி அதிரடி கைது
    X

    'கூகுள்-பே' மூலம் லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரி அதிரடி கைது

    • ரிசார்ட்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
    • மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மனோஜ்(வயது52). இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தது.

    ரிசார்ட்டுகளில் உணவு சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். அதன்படி அந்த ரிசார்ட் தகுதி சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தது. தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட மருத்துவ அதிகாரியான டாக்டர் மனோஜ் ரூ.1லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த ரிசார்ட்டின் மேலாளர், மனோஜை சந்தித்து பேசி ரூ.75ஆயிரம் தருவதாக கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவ அதிகாரி மனோஜ், அந்த பணத்தை தனது தனிப்பட்ட டிரைவர் ராகுல்ராஜிக்கு 'கூகுள்-பே' மூலமாக அனுப்புமாறு கூறியிருக்கிறார்.

    அதன்படி அனுப்புவதாக கூறிய ரிசார்ட் மேலாளர், அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கூறியதன்பேரில், குறிப்பிட்ட நேரத்துக்கு மருத்துவ அதிகாரியின் டிரைவரின் செல்போன் எண்ணுக்கு 'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளர் பணத்தை அனுப்பினார்.

    அப்போது மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு ஷாஜூ ஜோஸ், இன்ஸ்பெக்டர்கள் ஷின்டே, குரியன், பிலிப் சாம் உள்ளிட்டோர், அலுவலகத்துக்குள் அதிரடியாகசென்று மருத்துவ அதிகாரி மனோஜ் மற்றும் அவரது டிரைவர் ராகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களின் அலுவலகத்ததுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாவட்ட மருத்துவ அதிகாரி மனோஜ், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறையால் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். அதற்கு கேரள நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.

    இதையடுத்து மருத்துவ அதிகாரி தனது அலுவலகத்தில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தனது டிரைவரின் 'கூகுள்-பே' மூலமாக ரிசார்ட் மேலாளரிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×