search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முல்லை பெரியாறு அணையில் இன்று மத்திய தலைமை கண்காணிப்புக்குழு ஆய்வு- பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
    X

    முல்லை பெரியாறு அணையில் இன்று மத்திய தலைமை கண்காணிப்புக்குழு ஆய்வு- பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

    • 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறு த்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
    • குழுவினர் முல்லை பெரியாறு அணை, பேபி அணை, கேலரி, நீர்கசிவின் அளவு, 13 மதகு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணைமூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மதுரை, தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    அணையில் பராமரிப்பு பொறுப்பை தமிழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அணையின் உறுதித்தன்மை, பாதுகாப்பு குறித்து கேரளா அரசு தொடர்ந்து சந்தேகத்தை கிளப்பி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறு த்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    பருவமழை மாற்றங்களின்போதும், அணையின் நீர்மட்டம் உயரும்போதும், குறையும் போதும் ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்புக்குழுவை அமைத்தது. மேலும் அவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. கடந்த மே மாதம் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் 10 மாதங்களுக்கு பிறகு இன்று ஆய்வு மேற்கொண்டனர். மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் தமிழக தரப்பில் நீர்வள ஆதார த்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்ஷேனா, காவிரி தொழிற்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரளா அரசு தரப்பில் நீர்வளத்தறை கூடுதல் செயலாளர் வேணு, நீர்பாசன முதன்மை பொறியாளர் அலெக்ஸ்வர்க்கீஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த குழுவில் தலைவர் மற்றும் தமிழக, கேரளா அரசு சார்பில் தலைமை பொறியாளர்கள் என 3 பேர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தலைமை கண்காணிப்பு குழுவை 5 பேர் கொண்ட குழுவாக உயர்த்தியுள்ளது. அதன் பிறகு நடக்கும் முதல் ஆய்வு ஆகும். வழக்கமாக அணை ப்பகுதிக்கு கண்காணிப்புக் குழுவினர்படகு மூலம் சென்று வருவார்கள். ஆனால் முதன் முறையாக இன்று கார் மூலம் வல்லக்கடவு வழியாக சென்றனர். தளவாட பொருட்கள் கொண்டு செல்வது குறித்து பார்வையிட்டனர். மேலும் இந்த முறை தமிழக, கேரள பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குழுவினர் முல்லை பெரியாறு அணை, பேபி அணை, கேலரி, நீர்கசிவின் அளவு, 13 மதகு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் மாலையில் குமுளியில் ஆலோசனை க்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அணைக்கு தளவாட பொருட்கள் கொண்டு செல்வது குறித்து தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளனர். அதன் பின்னர் வனத்துறை இடையூறு இல்லாமல் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.75 அடியாக உள்ளது. 153 கனஅடி நீர் வருகிறது. 258 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. 164 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 46.57 அடியாக உள்ளது. 13 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 2.4, போடி 1.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×