search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கூட்டணி பற்றி தேவேகவுடாவின் கருத்துக்கு பினராயி விஜயன் எதிர்ப்பு
    X

    கூட்டணி பற்றி தேவேகவுடாவின் கருத்துக்கு பினராயி விஜயன் எதிர்ப்பு

    • தேவேகவுடா பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பது இது முதல் முறையல்ல.
    • தேவேகவுடா போன்ற அனுபவமிக்க அரசியல்வாதி இப்படி செய்வது முற்றிலும் அவமானகரமானது.

    திருவனந்தபுரம்:

    கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனது கட்சியின் அனைத்து மாநில பிரிவுகளும், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க ஒப்புதல் அளித்திருப்பதாக முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

    மேலும் கேரளாவில் நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறோம். எங்களது எம்.எல்.ஏ. அங்கு அமைச்சராக இருக்கிறார். கேரளாவின் இடதுசாரி அரசாங்கத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயன் கட்சியை காப்பாற்றுவதற்காக பாரதிய ஜனதாவுடன் கரநாடகாவில் முன்னேற முழு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

    தேவேகவுடாவின் இந்த பேச்சு கேரள மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கே.சுதாகரன், வி.டி.சதீசன் உள்ளிட்டோர் முதல்-மந்திரி பினராயி விஜயனை கடுமையாக தாக்கி கருத்து வெளியிட்டனர்.

    தனது நிலைப்பாடு குறித்து தேவேகவுடா கூறிய கருத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அடிப்படையற்ற உண்மைக்கு மாறான தகவலை அவர் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். இது பற்றி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பாரதிய ஜனதாவுடனான தொடர்பை திட்டவட்டமாக எதிர்க்கிறோம் எனவும், கேரளாவில் இடது முன்னணியுடன் வலுவாக நிற்போம் என்றும் ஜனதாதளம்(எஸ்) மாநில பிரிவு தெளிவு படுத்தி உள்ளது.

    தேவேகவுடா பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பது இது முதல் முறையல்ல. 2006-ம் ஆண்டு ஜனதா தளம்(எஸ்) பாரதிய ஜனதாவில் இணைந்தது. தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதாவுடன் இணைந்தார்.

    தேவேகவுடாவின் சமீபத்திய அறிக்கையால் நான் முற்றிலும் வியப்படைகிறேன். தேவேகவுடா போன்ற அனுபவமிக்க அரசியல்வாதி இப்படி செய்வது முற்றிலும் அவமானகரமானது. இதுபோன்ற ஆதாரமற்ற பொய்கள், சங்பரிவாருக்கு எதிரான போரில் சி.பி.எம். ஒரு அசைக்க முடியாத மற்றும் தளராத சக்தியாக இருந்து வருகிறது. எங்களின் நிலைப்பாட்டில் தெளிவற்ற தன்மைக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    Next Story
    ×