என் மலர்
இந்தியா
பம்பையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிப்பு- பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்
- சபரிமலையிலும் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டியது.
- மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
"ஃபெஞ்சல்" புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கேரள மாநிலத்தில் "ஃபெஞ்சல்" புயல் காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று வயநாடு , கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இந்த மழை வருகிற 7-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்தது. பத்தினம்திட்டா மாவட்டத்திலும் பல இடங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
சபரிமலையிலும் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டியது. மழையை பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள். மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பம்பை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மழை குறைந்து தண்ணீர் வரத்தும் குறைந்ததால் பம்பை ஆற்றில் இறங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இருந்தபோதிலும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வனப்பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் பம்பை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பம்பை ஆற்றின் இருபுற கரைகளிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
பிரீபெய்டு டோலி சேவை அறிமுகம்
சபரிமலையில் பிரீபெய்டு டோலி சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பம்பை, நீலிமலை, வலிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் சேவை மையம் அமைக்கப்படுகிறது. டோலி சேவையை பெற நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தலாம். 80 கிலோ வரை ரூ.4 ஆயிரம், 100 கிலோ வரை ரூ.5ஆயிரம், 100 கிலோவுக்கு மேல் ரூ.6ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்க்ப்பட்டுள்ளது. பிரீபெய்டு டோலி சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து டோலி தூக்கும் தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.