search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீட் வினாத்தாள் கசிவு... மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம் - உச்ச நீதிமன்றம்
    X

    நீட் வினாத்தாள் கசிவு... மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம் - உச்ச நீதிமன்றம்

    • நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம்.
    • சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது.

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

    ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய அரசை நோக்கி பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்,

    கசிந்த நீட் வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி?, வினாத்தாள் லாக்கருக்கு எப்போது அனுப்பப்பட்டது?, லாக்கர்களில் இருந்து எப்போது அவை எடுக்கப்பட்டன?, நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டன?, நீட் மறுதேர்வு கோர முகாந்திரம் என்ன?, 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? அதில் முழு மதிப்பெண்கள் பெற்ற 6 தேர்வர்களும் அடக்கமா?

    நீட் தேர்வுத்தாள் கசிவு நடைபெறவில்லை என்று தேசிய தேர்வு முகமை நிலைப்பாடாக கொண்டாலும் 2 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டால் மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுவதில்லை. ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது. நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். எந்த கட்டத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது?, கசிவுக்கு காரணமானவர்கள் மீதும், பலனடைந்தவர்கள் மீதும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    டெலிகிராம், வாட்சப் போன்ற சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது. ஒரு இடம் மட்டும் இல்லாமல் பல இடங்களில் பெருமளவில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும். எத்தனை மாணவர்களின் தேர்வு முடிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட மாணவர்களின் இருப்பிடங்கள் எங்கே உள்ளது.

    இறுதியாக நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம் என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதிலை மத்திய அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×