search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசா பல்கலையில் நேபாள் மாணவி தற்கொலை.. போராடிய மாணவர்கள் வெளியேற்றம்.. களமிறங்கிய பிரதமர்!
    X

    ஒடிசா பல்கலையில் நேபாள் மாணவி தற்கொலை.. போராடிய மாணவர்கள் வெளியேற்றம்.. களமிறங்கிய பிரதமர்!

    • இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம் என்று கூறி மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
    • பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

    ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் செயல்பட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) பல்கலைக்கழகத்தில் நேபாள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் பலர் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பிரகிருதி லம்சால் என்ற 20 வயது நேபாளை சேர்ந்த மாணவி பல்கலை. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கலிங்கா பல்கலையில் அவர் மூன்றாம் ஆண்டு பி.டெக் பயின்று வந்தார்.

    அதே பல்கலையில் பயின்று வந்த லக்னோவை சேர்ந்த ஆத்விக் ஸ்ரீவஸ்தவா(21 வயது) என்பவரால் பிரகிருதி தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இவர் பிரகிருதியின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஆத்விக்கின் தொடர் தொந்தரவால் மன அழுத்தத்துக்கு ஆளான பிரகிருதி கடந்த மாதமே பல்கலை. மாணவர் மனநல ஆலோசகரிடம் தனது பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அதை அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் அதீத மன அழுத்தம் காரணமாக பிரகிருதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட அதே நாளில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவா வெளியூருக்குத் தப்பியோட விமான டிக்கெட் எடுத்துள்ளதும் அம்பலமானது.

    இதற்கிடையே பல்கலையில் பயின்று வந்த நேபாள் நாட்டை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    கடந்த ஒரு மாதமாக, வளாகத்தில் ஒழுக்கமின்மை குறித்து புகார் அளித்து வந்தபோதும் யாரும் பதிலளிக்கவில்லை என்று அம்மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராடும் நேபாள் மாணவர்களை நிர்வாக அதிகாரிகள் தாக்குவதும், அவர்களை மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

    அதில் பெண் ஆசிரியைகள் நேபாள் மாணவர்களை பார்த்து, "உங்களுக்கு ஆண்டு முழுக்க உணவுகளை இலவசமாகப் போடுகிறோம். அதன் விலை மட்டும் ரூ.40 ஆயிரம். இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம்" என்று கூறி அனைவரையும் உடனடியாக பல்கலையை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளனர். மேலும் பல்கலையில் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நிர்வாகம் தங்களை வலுக்கட்டாயமாக வெளிற்றியுள்ளது என்றும் பயணச்சீட்டுகள் இன்றியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் சகோதரர் அழித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் நேபாள் பிரதமர் சர்மா ஒலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் இரண்டு அதிகாரிகளை அனுப்பியது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து ஒடிசா பாஜக அரசு தலையிட்டு, மாணவர்களை வெளியே அனுப்பிய KIIT-ஐ அதன் முடிவை மாற்றுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து KIIT பல்கலைக்கழகம் நேபாள மாணவர்கள் திரும்பி வருமாறு வலியுறுத்தி ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×