என் மலர்
இந்தியா
சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: 1200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவதி
- சிக்கிமில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
- இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
காங்டாங்:
சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டியது. இடைவிடாது பெய்த கனமழையால் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவுகளால் சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற மாங்கன் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. அந்த மாவட்டத்தின் டிசோங்கு, சுங்தாங், லாச்சென் மற்றும் லாச்சுங் ஆகிய நகரங்கள் தற்போது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
கனமழையால் மாங்கன் மாவட்டத்தில் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாங்கன் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில், சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர் என அம்மாநில முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.