search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Annie Raja- Mukesh
    X

    முகேஷ் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க சட்ட ரீதியாகவோ, தார்மீக தகுதியோ இல்லை: ஆனி ராஜா

    • முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    • இடதுசாரி முன்னணி பெண்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முகேஷ் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க சட்டரீதியாகவோ தார்மீக தகுதியோ அவருக்கு இல்லை என்று சிபிஐ தலைவர் ஆனி ராஜா கூறியுள்ளார்.

    மேலும் ஆனி ராஜா கூறியதாவது:- "ஹேமா கமிஷனின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்து, திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கு மாநில அரசின் முயற்சிகளுக்கு இது துணைபுரியும்".

    தற்போது முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக அல்லது சட்டப்பூர்வ தகுதி இல்லை. எனவே அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    முகேஷ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், மாநில அரசின் நேர்மையான முயற்சிகள் தடைபடும். இது மாநில அரசின் இமேஜையும் பாதிக்கும். இடதுசாரி முன்னணி பெண்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.

    Next Story
    ×