என் மலர்
இந்தியா
தமிழகத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை - தயாநிதி மாறன் எம்.பி.
- பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் இருப்பதால், பட்ஜெட் பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது.
- நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றம்
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று அறிவித்தார்.
மேலும் பேசிய அவர், புதிய வரி முறையின் வரி அடுக்கில் சில திருத்தங்களை நான் முன்மொழிகிறேன். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ஆனால் ரூ.4-8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி செலுத்த வேண்டும். ரூ.8-12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் ரூ.12-16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் ரூ.16-20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.20-24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரியும் 24 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கலாம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், "இது மிகவும் ஏமாற்றம் தரும் பட்ஜெட். டெல்லிக்கு குறிப்பாக பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு வாக்காளர்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ. 8-12 லட்ச வருமானத்துக்கு 10% வரி உள்ளது தெரிவித்துவிட்டு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறுவது மிகவும் குழப்பமாக உள்ளது.
எனவே, நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் தான். பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் இருப்பதால், பட்ஜெட் பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது..
தமிழகம் அல்லது வேறு எந்த தென் மாநிலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை" என்று தெரிவித்தார்.