search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நாடு ஒரே வரி என்பது நடைமுறைக்கு சரிவராது - தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    X

    ஒரே நாடு ஒரே வரி என்பது நடைமுறைக்கு சரிவராது - தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    • தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு
    • மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜி.எஸ்.டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதுகுறித்து துணைக் குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

    'ஒரே நாடு ஒரே வரி' என்பது போன்ற முழக்கங்களை எழுப்புவது எளிது. ஆனால் செயல்படுத்துவது கடினம். 'ஒரே நாடு ஒரே வரி' என்பது அரசியலுக்கு பொருந்துமே தவிர செயல்பாட்டிற்கு சரிவராது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநிலங்களுடைய உரிமைகள் காப்பாற்றப்படும் அளவுக்கு எங்களுக்கு நம்பிக்கை வந்தால்தான், உண்மையிலேயே அது 'ஒரே நாடு ஒரே வரி'.

    ஜி.எஸ்.டி. கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். நிஜமாகவே கூட்டாட்சி தத்துவத்தில் நடைபெறுகின்ற கூட்டமோ, கவுன்சிலோ இருந்தால், இழப்பீடு தொகை குறித்த விவாதமும் இந்த கவுன்சிலில் தான் நடைபெற வேண்டும். தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரோ, மத்திய அரசோ முடிவெடுத்து, உண்டு, இல்லை என்று சொல்வது நியாயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×