என் மலர்
இந்தியா
சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
- மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படும்.
- மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ந் தேதி நடைபெறும்.
சபரிமலை :
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை திறக்கப்படும். அன்று மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பூஜைக்காக டிசம்பர் மாதம் 27-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அதன் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். ஜனவரி 20-ந் தேதி வரை நடை திறந்திருக்கும்.
சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு அவசியம். ஆன்லைன் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்காக உடனடி முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல் மையத்தில் மட்டும் 10 உடனடி முன்பதிவு கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை மகா கணபதி கோவில், பத்தனம் திட்டா மாவட்டம் பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயம் மாவட்டம் எருமேலி கோவில், எட்டமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர், கீழ்இல்லம், இடுக்கி மாவட்டத்தில் குமுளி, மூழிக்கல், வண்டிபெரியார் என 12 இடங்களில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆன்லைன் முன்பதிவு செய்ய ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கையில் வைத்திருந்தால் போதும்.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பெருவழி பாதையான எருமேலியில் இருந்து கரிமலை வழியாக செல்லும் கானக பாதையும், புல்மேடு வழி ஆகியவையும் திறக்கப்பட உள்ளது.
அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பஸ் வசதிக்கான ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் இருந்து மட்டும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலையில் ரெயில் பாதைக்காகவும், எருமேலியில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.