search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகர விளக்கு பூஜை தினத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் முன்பதிவு
    X

    மகர விளக்கு பூஜை தினத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் முன்பதிவு

    • பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர்.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள்.

    கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சபரிமலை ஐயப்பன் கோவில். பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடுமையான வனப்பகுதிக்கு நடுவே, கடல் மட்டத்தை ஒப்பிடுகையில் 914 மீட்டர் உயரத்தில் மலைக்கு உச்சியில் இருக்கிறது சபரி மலை ஐயப்பன் கோவில்.

    இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து 48 அல்லது 60 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறார்கள்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதேபோல் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக பல நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதனால் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.

    சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் கன்னி சாமியாக (முதன்முறை) ஏராளமானோர் வருகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு முறை இங்கு வருவார்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே உள்ளது. இதன் காரணமாக மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்புவார்கள். இருந்த போதிலும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தபோதிலும் அந்த காத்திருப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பக்தர்களுக்கு பெரிய சிரமமாக தெரிந்ததில்லை.


    ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு நடந்து வரும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜை நடக்கக்கூடிய நேரத்திலும் இந்த ஆன்லைன் முன்பதிவு முறையே கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    ஆன்லைன் முன்பதிவின்படி ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வசதிக்காக உடனடி முன்பதிவு முறையும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் விருப்பமாக இருக்கும். இதனால் அய்யப்ப பக்தர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அஞ்சுவதும் இல்லை, அதனை கடைபிடிக்க தவறுவதும் இல்லை. அதன்படியே ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இந்நிலையில் தான் நடப்பு ஆண்டு மண்டல பூஜை சீசனில் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ஆன்லைன் முன்பதிவில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்திருந்த நிலையில், உடனடி முன்பதிவு முறையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்து சபரிமலைக்கு வந்தனர். இதனால் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    அதுமட்டுமின்றி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதையிலும் கூட பக்தர்கள் ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். இதன் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 15 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. இந்த காலதாமதம் சபரிமலைக்கு வந்த அனைத்து பக்தர்களையும் சிரமம் அடையச் செய்தது. அதிலும் வயதான பக்தர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் கஷ்டப்பட்டனர்.

    இதனை கண்ட கேரள ஐகோர்ட்டு நேரடியாக தலையிட்டு சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட்டது. மேலும் நெரிசலை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளையும் ஐகோர்ட் கூறியது. அதனை தேவசம்போர்டு மற்றும் காவல்துறை கடைபிடித்த போதிலும் சபரிமலையில் கூட்ட நெரிசலை தடுக்க முடியவில்லை. மண்டல பூஜை காலத்தில் ஏற்பட்டது போன்று மகர விளக்கு பூஜை காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அரசு தெரிவித்தது. ஆனால் மகர விளக்கு பூஜை காலத்திலும் அதே நிலை தான் நிலவி வருகிறது.

    தங்களது கஷ்டங்களை போக்கி அருள் புரிய வேண்டும் என்று ஐயப்பனை வேண்டுவதற்காக வரக்கூடிய பக்தர்கள், சாமியை தரிசிக்கவே கடுமையான கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பம்பை, சன்னிதானம் மற்றும் பதினெட்டாம்படி என அனைத்து இடங்களிலும் நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமியை தரிசிக்க முடிகிறது. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்த ஐயப்ப பக்தர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரும் உள்ளனர். இதன் காரணமாக பதினெட்டாம் படி மற்றும் சன்னிதானத்தில் பக்தர்களை வேகவேகமாக இழுத்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் சில பக்தரக்ள் கீழே விழுந்து காயமடைகிறார்கள். அந்த நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்த ஐயப்ப பக்தர்கள் சிலரை போலீசார் தாக்கிய சம்பவங்களும் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பக்தர்கள் சிலர் பதினெட்டாம்படி பகுதியில் போலீசாரால் தாக்கப்பட்ட நிலையில், பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


    பக்தர்கள் என்று கூட சிந்திக்காமல் போலீசார் அத்துமீறி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பை வரை வந்துவிட்டு, சபரிமலைக்கு செல்லாமல் தங்களது ஊருக்கே திரும்பி செல்கிறார்கள்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், சபரிமலைக்கு செல்வதில் உள்ள சிரமங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்புகிறார்கள். அவர்கள் பம்பையில் இரு ந்தே மன துக்குள் ஐயப்பனை நினைத்து வணங்கி விட்டு, தங்களது ஊருக்கு கண்ணீருடன் திரும்புவதை காண முடிகிறது. அவ்வாறு சபரிமலைக்கு செல்லாமல் திரும்பக்கூடிய தமிழக பக்தர்கள், வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு சென்று நெய்யபிஷேகம் செய்கிறார்கள்.

    48 மற்றும் 60 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை காண வந்தால், அது அது நடக்கவில்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடியில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கூறும்போது, நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறேன். ஆனால் இதுவரை இதுபோன்ற சிரமத்தை நான் சந்திக்கவில்லை. எந்த ஒரு ஐயப்ப பக்தனும் இதுபோன்ற சிரமத்தை சந்திக்கக் கூடாது என்று கூறிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

    சபரிமலையில் சந்தித்த சிரமங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த சில ஐயப்ப பக்தர்கள் கூறியதாவது:- ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. குழந்தைகளுடன் வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை பார்த்தால் கண்ணீர் வருகிறது. போலீசாரிடம் அத்துமீறல் குறித்து கேட்டால் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கேட்டு தாக்குகிறார்கள். சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும். வரும் காலங்களில் இது போன்று நடப்பதை தடுக்க கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெரிந்தும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை கேரள அரசு, தேவசம்போர்டு மற்றும் போலீசார் எடுக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீசன் தொடங்குவதற்கு முன்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தியும், அதனை நிறை வேற்ற முடியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் பக்தர்கள் வருகை மூலம் கேரளா அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. ஆனால் பக்தர்கள் சிரமப்படாமல் வந்து செல்லவும், கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

    Next Story
    ×