search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது: ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்பு
    X

    எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது: ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்பு

    • பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    பாட்னா:

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தை பீகாரில் நடத்த மம்தா பானர்ஜி பரிந்துரைத்து இருந்தார். அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் 12-ந் தேதி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    தற்போது இந்த கூட்டம் 23-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இதை அறிவித்தார்.

    நிதிஷ்குமாருடன் இணைந்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின்

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

    முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

    அதன்படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×