search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி 21-ந்தேதி அமெரிக்கா பயணம்- ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார்
    X

    பிரதமர் மோடி 21-ந்தேதி அமெரிக்கா பயணம்- ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார்

    • டெலவாரேவில் 21-ந் தேதி ‘குவாட்’ மாநாடு நடக்கிறது.
    • நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 79-வது அமர்வு நடக்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார். நியூயார்க் நகரில் 21-ந் தேதி 'குவாட்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன் அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் தொடங்குகிறது.

    'குவாட்' அமைப்பு என்பது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்த அமைப்பாகும். இந்த ஆண்டு அதன் மாநாட்டை இந்தியா நடத்துவதாக இருந்தது.

    கடந்த ஜனவரி மாதம், குடியரசு தின விழா சமயத்தில் டெல்லியில் அந்த மாநாட்டை நடத்த இந்தியா விரும்பியது. அதற்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் வர மறுத்து விட்டதால், மாநாடு நடக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து, இம்மாதம் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துடன் 'குவாட்' மாநாட்டை நடத்தலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்தது. ஆனால், ஜோ பைடன், தனது சொந்த ஊரான டெலவாரேவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, டெலவாரேவில் இருந்துதான் 36 ஆண்டுகளாக செனட் சபைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

    எனவே, டெலவாரேவில் 21-ந் தேதி 'குவாட்' மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி, ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அப்போது, ஜோ பைடனை மோடி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

    22-ந் தேதி, நியூயார்க் மாகாணம் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் உள்ள பிரமாண்ட அரங்கில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த அரங்கம், 16 ஆயிரம் இருக்கைகளை கொண்டது.

    ஆனால் அதில் பங்கேற்க இதுவரை 24 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    ஐ.நா. தலைமையகத்தில் 22 மற்றும் 23-ந் தேதிகளில் ஐ.நா. நடத்தும் 'எதிர்காலத்துக்கான உச்சி மாநாடு' என்ற உயர்மட்ட மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    உலகில் போர், கிளர்ச்சி நடந்து வரும் சூழலில், சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 79-வது அமர்வு நடக்கிறது. அதில் நடக்கும் பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது.

    ஆனால், அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 28-ந் தேதி பங்கேற்று பேசுவார் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    Next Story
    ×