என் மலர்
இந்தியா
கர்நாடகாவில் லாரி விபத்தில் 10 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்- நிவாரணம் அறிவிப்பு
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
- காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை உதவிக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் குமுதா என்ற பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக தார்வார் பகுதியில் இருந்து ஒரு லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 25 வியாபாரிகள் அதில் பயணித்தனர். இந்த லாரி இன்று அதிகாலை யல்லாப்பூர் தாலுகா பகுதியில் உள்ள அர்பைல் காட் என்ற பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தானது.
இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 10 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற வியாபாரிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். லாரியின் அடியில் சிக்கி கொண்டதால் அவர்கள் உயிர் பிழைக்க அலறினர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து யல்லாபூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் விபத்தில் பலியான 10 பேரின் உடல்களையும் போலீசார் போராடி மீட்டனர். பின்னர் படுகாயத்துடன் போராடிய 15 பேரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளூர் அரசு அதிகாரிகள் பாதிப்படைந்தவர்களுக்கு உதவிபுரிந்து வருகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை உதவிக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.