என் மலர்
இந்தியா
சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு
- கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கருத்தை மாற்றியுள்ளது.
- மக்கள் தங்கள் உடற்தகுதிக்காக தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்களை கூட வைத்திருக்கிறார்கள்.
2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி கூறுகையில், யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை ஸ்ரீநகரில் உணர முடியும். யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச யோகா தினம் 10 வருட வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2014-ல் நான் ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன, இதுவே சாதனையாக இருந்தது. அதன்பிறகு, யோகா தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
நான் வெளிநாட்டில் இருக்கும்போது, உலகத் தலைவர்கள் என்னிடம் யோகா பற்றி விவாதிக்கிறார்கள். 10வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வேளையில், யோகாவை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கருத்தை மாற்றியுள்ளது. இன்று உலகம் ஒரு புதிய யோகா பொருளாதாரத்தை முன்னோக்கிப் பார்க்கிறது. இந்தியாவில் இருந்து ரிஷிகேஷ் மற்றும் காசியில் இருந்து கேரளா வரை யோகா சுற்றுலாவின் புதிய இணைப்பு காணப்படுகிறது.
உலகெங்கிலும் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் இந்தியாவில் உண்மையான யோகாவை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடற்தகுதிக்காக தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்களை கூட வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.
முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பியூஷ் கோயல், ஆகியோர் பங்கேற்று யோகா செய்தனர்.
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், சண்டிகர் முதல் மந்திரி விஷ்ணு தியோ சாய், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, எச்.டி.குமாரசாமி, ஹேமா மாலினி, பி.எல்.வர்மா, சிவ்ராஜ் சவுகான், நிதின் கட்காரி, பிரகலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி, பூபேந்தர் யாதவ், மன்சுக் மாண்டவியா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் மற்றும் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தனர்.
மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஷைனா என்சி மற்றும் பலர் யோகாசனம் செய்தனர்.
இந்தோ-திபெத் எல்லை போலீசார் 15,000 அடி உயரத்தில் வடக்கு சிக்கிமில் உள்ள முகுதாங் சப் செக்டார் என்ற இடத்தில் யோகா செய்தனர்.