search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மார்ச் 6-ந்தேதி மேற்கு வங்காளம் செல்கிறார் பிரதமர் மோடி: சந்தேஷ்காளியில் பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்கிறார்
    X

    மார்ச் 6-ந்தேதி மேற்கு வங்காளம் செல்கிறார் பிரதமர் மோடி: சந்தேஷ்காளியில் பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்கிறார்

    • திரிணாமுல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் கூட்டாளிகளுடன் பெண்களை துன்புறுத்தி நிலத்தை மிரட்டி அபகரித்ததாக குற்றச்சாட்டு.
    • பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு.

    மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காளியில் பழங்குடியின பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டதாகவும், மத்திய மற்றும் மாநில நலத்திட்டங்கள் மூலம் பெறும் பணத்தை முறைகேடாக பறித்ததாகவும் புகார்கள் எழுந்தன.

    ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஷாஜகான் ஷேக் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இவர் தலைமறைவாக உள்ளார். அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யக்கோரி வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    மேற்கு வங்காள மாநிலத்தின் எதிர்க்கட்சியான பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    சந்தேஷ்காளி சம்பவம் தற்போது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் 6-ந்தேதி பிரதமர் மோடி மேற்கு வங்காளம் செல்கிறார். அப்போது மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜனதா பெண்கள் அணிகளை சந்தித்து உரையாற்றுகிறார். அப்போது சந்தேஷ்காளி சென்று பாதிக்கப்பட்டதாக பெண்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேசிய பட்டியலினத்தோர் ஆணைய பிரநிதிகள் குழு அண்மையில் சந்தேஷ்காளி சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை பெண்கள் எடுத்துரைத்தனர். ஷாஜகான் ஷேக்கை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, டெல்லி திரும்பிய பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கை அளித்துள்ளனர். அதில் மேற்கு வங்காள அரசை கலைக்க உத்தர விட வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் எனவும், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×