search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிபிசி ஆவணப்படம்: தைரியமில்லாதவர்களின் அரசியல் விளையாட்டு இது... வெளியுறவுத்துறை மந்திரி காட்டம்
    X

    பிபிசி ஆவணப்படம்: தைரியமில்லாதவர்களின் அரசியல் விளையாட்டு இது... வெளியுறவுத்துறை மந்திரி காட்டம்

    • அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது என ஜெய்சங்கர் தெரிவித்தார்
    • பிபிசி ஆவணப்படம் வெளியான நேரம் எதிர்பாராமல் நடந்தது என்று நினைக்கிறீர்களா?

    புதுடெல்லி:

    குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் இந்திய அரசியலில் தொடர்ந்து விவாதப்பொருளாகி உள்ளது. 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது. ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் டெல்லி வன்முறை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது. ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி இந்த ஆவணப்படம் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்தார். அப்போது பிபிசி ஆவணப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது:

    நீங்கள் ஆவணப்படம் எடுக்க வேண்டுமா? 1984ல் டெல்லியில் பல விஷயங்கள் நடந்தன. ஏன் ஒரு ஆவணப்படத்தையும் நாம் பார்க்கவில்லை? எனவே, பிபிசி ஆவணப்படம் வெளியான நேரம் எதிர்பாராமல் நடந்தது என்று நினைக்கிறீர்களா?.

    ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவிலும் டெல்லியிலும் தேர்தல் சீசன் தொடங்கிவிட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. அரசியல் களத்திற்கு வர தைரியமில்லாதவர்களால் விளையாடப்படும் அரசியல் இது. இதை கொண்டாடுபவர்கள் யார் என்று பாருங்கள். இந்தியா, இந்திய அரசு, பாஜக, பிரதமர் மீது தீவிரவாத தன்மை கொண்ட பார்வையை வடிவமைக்கும் வேலை சிறிது சிறிதாக நடைபெறுகிறது. இது 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×