என் மலர்
இந்தியா
ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு
- தேசிய தேர்வு முகமையினால் யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது.
- பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மாற்றுத் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமையினால் (NTA) யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வாக ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிசம்பர் 11-ம் தேதி வரை பெறப்பட்டது.
இதற்கான தேர்வுகள் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 2025 ஜனவரியில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை (ஜன.14, 15, 16) வரை கொண்டாடப்படுகிறது. அதில் ஜனவரி 15 (மாட்டுப் பொங்கல்) மற்றும் ஜனவரி 16 (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, இன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்று தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யுஜிசி நெட் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.