என் மலர்
இந்தியா

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகளில் முதற்கட்ட விசாரணை கட்டாயமில்லை - உச்சநீதிமன்றம்

- இந்த மனுவை நீதிபதிகள் திபாங்கர் தத்தா, சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.
- விசாரணை நடத்தாததற்காக வழக்கை ரத்து செய்ததன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றம் தவறு செய்துள்ளது
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய வழக்கில் முதற்கட்ட விசாரணை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவில் அரசு ஊழியர் ஒருவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக மாநில லோக் அயுக்தா போலீசார் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறி இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் திபாங்கர் தத்தா, சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிலும் முதற்கட்ட விசாரணையை கோருவதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட சில வழக்குகளில் முதற்கட்ட விசாரணை தேவைப்பட்டாலும், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்போது அத்தகைய விசாரணை கட்டாயமில்லை.
முதல்கட்ட விசாரணையின் நோக்கம், பெறப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பது அல்ல. மாறாக அது ஒரு கைது செய்யக்கூடிய குற்றமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே பயன்படும்.
வழக்கு தொடர்பான ஆதாரத்தை உயர் அதிகாரி ஒருவர் கைப்பற்றினால், அது விரிவானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால், முதல் பார்வையிலேயே குற்றம் வெளிப்படையாகக் கண்டுபிடிக்கப்பட்டால் முதல்கட்ட விசாரணையைத் தவிர்க்கலாம்.
இந்த விவகாரத்தில், முதல்கட்ட விசாரணை நடத்தாததற்காக வழக்கை ரத்து செய்ததன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றம் தவறு செய்துள்ளது என்று தெரிவித்தனர். தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட அரசு ஊழியர் மீதான வழக்கை விசாரிக்க உத்தரவிட்டனர்.