என் மலர்
இந்தியா

ராகுல் காந்திக்கு காங்கிரசில் எப்போதும் முக்கிய இடம் உண்டு: ப.சிதம்பரம்
- காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
- தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வதுதான் சிறந்தது.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தல், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு தொண்டர்களும், தலைவர்களும் விடுத்துள்ள கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்பாரா? என்று எனக்கு தெரியவில்லை.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அவர் கட்சித்தலைவராகவும் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் இதுவரை அவர் மறுத்து வருகிறார். ஆனால் அவர் மனம் மாறலாம்.
காங்கிரஸ் கட்சியில் 1921 முதல் 1948 வரை மகாத்மா காந்தி அங்கீரிக்கப்பட்ட தலைவராக இருந்தார். பின்னர் நேரு, அடுத்தது இந்திரா என ஒருவருக்குப்பின் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களாக இருந்தனர்.
இப்படிப்பட்ட மக்கள் தலைவர்களை தவிர, ஓரிரு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் வரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வழிநடத்தியவர்கள் பலர். காங்கிரசின் வரலாற்றில் மக்கள் தலைவரும், கட்சியின் தலைவரும் ஒரே நபராக இருந்த காலங்கள் உண்டு. வெவ்வேறு நபர்களாக இருந்த காலங்களும் உண்டு.
கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட மக்கள் தலைவரும், கட்சியின் தலைவரும் அவராக இருப்பார். இல்லையென்றால் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக அவரும், கட்சியை வழிநடத்த வேறொருவரும் இருப்பார்கள்.
அந்தவகையில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு.
காங்கிரஸ் தலைவர் பதவியானது ஒரு பெரிய பாரம்பரியம், வரலாறு, பரந்த அதிகாரங்கள் மற்றும் பெரிய பொறுப்புகளுடன் கூடியது. அதன்படி காங்கிரஸ் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவருக்கு கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உயர்ந்த மரியாதை அளிப்பார்கள்.
தலைவர் பதவிக்கு தேர்தல் என்பது நிலையான நடைமுறைதான். ஆனால் தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வதுதான் சிறந்தது. காங்கிரசும் சரி, பிற கட்சிகளும் சரி இதைத்தான் பின்பற்றுகினறன.
பா.ஜனதா தலைவரான ஜே.பி.நட்டா, அதற்கு முன்னர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்காரி போன்றவர்களும் ஒருமனதாகத்தான் தேர்வு செய்யப்பட்டார்கள் என நினைக்கிறேன்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் அதிக அளவிலான தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குறைந்த தூரம் அல்லது நீண்ட தூரம் தன்னெழுச்சியாக பங்கேற்று வருகிறார்கள்.
இதன் மூலம் பழங்காலத்தை சேர்ந்த அதேநேரம் இன்னும் புதிதாகவே இருக்கும் ஒரு செய்தியை மக்கள் கேட்டு வருகின்றனர். அது, 'வெறுப்பு அல்லது கோபம் அல்லது வகுப்புவாத மோதலால் இந்த நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க முடியாது; அன்பும் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் நாட்டு மக்களை ஒன்றிணைக்கும்; அத்தகைய ஒற்றுமை மட்டுமே பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும்' என்பதாகும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.






