என் மலர்
இந்தியா
சாதியை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பா?: பார்முலாவை சொல்லுங்க ராகுல்- அசாம் முதல்வர்
- ஒருவர் அவருடைய சாதி பெயரை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி சாத்தியம்?.
- ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சாதி குறித்து கேட்ட முடியும். நாங்கள் அவருடைய சாதி குறித்து கேட்க முடியாது.
நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது பாஜக எம்.பி. சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேசுகிறார்கள் என ராகுல் காந்தியை மறைமுக விமர்சனம் செய்தார். இதனால் ராகுல் காந்தியை இழிவுப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் ஒருவரை அவருடைய சாதியை பெயரை வெளிப்படுத்தும்படி கூற முடியாது எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அசாம் மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஒருவருடைய சாதியை வெளிப்படுத்தாமல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பார்முலாவை ராகுல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான பாஜக கட்சியின் இணை-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹிமாந்தா பிஸ்வா சர்மா இது தொடர்பாக கூறியதாவது:-
ஒருவருடைய சொந்த சாதியை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான பார்முலாவை நாங்கள் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இதற்கான பார்முலாவை தெரியப்படுத்தட்டும். அதன்பின் இது தொடர்பாக முடிவு செய்கிறோம்.
பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இது நாடு முழுவதும் நடத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது வேறு விசயம். ஆனால், ஒருவர் அவருடைய சாதி பெயரை வெளிப்படுத்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்படி சாத்தியம்?
ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் சாதி குறித்து கேட்ட முடியும். நாங்கள் அவருடைய சாதி பற்றி கேள்வி கேட்க முடியாது.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.