search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கல்லூரி கதவுகளுக்கு ஆரஞ்சு வர்ணம் பூச ராஜஸ்தான் அரசு உத்தரவு.. காவிமயமாக்கல் என காங்கிரஸ் சாடல்
    X

    கல்லூரி கதவுகளுக்கு 'ஆரஞ்சு' வர்ணம் பூச ராஜஸ்தான் அரசு உத்தரவு.. காவிமயமாக்கல் என காங்கிரஸ் சாடல்

    • தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க இந்த நடவடிக்கை என்று அரசு கூறியுள்ளது
    • மேஜைகளே பற்றாக்குறையாக உள்ள நிலையில் பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காக செலவிடுகிறது

    ராஜஸ்தானில் கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்தது. சமீப காலமாக ராஜஸ்தான் அரசு பிறப்பிக்கும் வித்தியாசமான உத்தரவுகள் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகி வருகிறது. சமீபத்தில் தெருவில் திரியும் மாடிகளை ஆதரவற்ற மாடுகள் என்றுதான் மரியாதையோடு மக்கள் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில் தற்போது அரசுக் கல்லூரிகளின் நுழைவாயிலில் இருக்கும் கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்ற அதிரடி உத்தரவை ராஜஸ்தான் உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி முதற்கட்டமாக, 10 மண்டலங்களில் உள்ள 20 அரசு கல்லூரிகளின் வாசற்கதவுகளுக்கு அடுத்த 7 நாட்களுக்குள் ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்றும், அதனைப் புகைப்படமாக எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரியில் சேரும் போதே மாணவர்கள் நேர்மறையாக உணரும் வகையில் கல்லூரிகளின் கல்விச் சூழலும் சூழ்நிலையும் இருக்க வேண்டும். கல்லூரிகளில் நேர்மறையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இது கல்வித்துறையைக் காவி மயமாக்கும் முயற்சி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் மாணவர் அணியின் மாநில தலைவர் வினோத் ஜாகர், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகளுக்கு தேவையான கட்டிட வசதிகள் இல்லை, மேசைகள் இல்லை. ஆனால் இந்த சூழலில் மாநில அரசு பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காக செலவிடுகிறது என்று தெரிவித்தார்.

    அரசு சார்ந்த நிறுவனங்களான தூர்தர்சன் தொலைக்காட்சி லோகோ , பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் லோகோ , வந்தே பாரத் ரெயில்கள் என அனைத்தின் வண்ணமும் காவி நிறத்தை ஒத்த நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×