என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர் விடுதலைக்காக சந்தித்த சட்டப்போராட்டங்கள்
- இந்த கொடிய சம்பவம் அரங்கேறி, 31 ஆண்டுகள் கடந்து விட்டன.
- ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.
அது, 1991-ம் ஆண்டு
மே மாதம் 21-ந் தேதி இரவு 10.10 மணி.
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இந்திய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஒன்று பதிவாகப்போகிறது என்று யாரேனும் நினைத்துப்பார்த்தது இல்லை.
அந்த நாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கி பலியானது, உலகையே உலுக்கி விட்டது.
இந்த கொடிய சம்பவம் அரங்கேறி, 31 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைய தலைமுறை வாசகர்களுக்காக அந்த கருப்பு அத்தியாயத்தின் பக்கங்களில் இருந்து சில துளிகளை தூசு தட்டித்தருகிறோம்.
ராஜீவ் காந்தி மட்டும் அன்றைய நாளில் இந்த மண்ணில் மரணத்தைத் தழுவிவிடவில்லை. அவரோடு சேர்ந்து தர்மன் (போலீஸ்காரர்), சாந்தனி பேகம் (மகளிர் காங்கிரஸ் தலைவர்), ராஜகுரு (போலீஸ் இன்ஸ்பெக்டர்), சந்திரா (போலீஸ்காரர்), எட்வர்டு ஜோசப் (போலீஸ் இன்ஸ்பெக்டர்), கே.எஸ்.முகமது இக்பால் (போலீஸ் சூப்பிரண்டு), லதா கண்ணன் (மகளிர் காங்கிரஸ் தொண்டர்), கோகிலவாணி (லதா கண்ணனின் 10 வயது மகள்), டேரில் ஜூட் பீட்டர் (கூட்டத்துக்காக சென்றவர்), முனுசாமி (முன்னாள் எம்.எல்.சி), சரோஜா தேவி (கல்லூரி மாணவி), பிரதீப் குப்தா (ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி), எத்திராஜூ, முருகன் (போலீஸ்காரர்), ரவிச்சந்திரன் (கறுப்பு பூனை கமாண்டோ) என 15 பேர் (மொத்தம் 16 பேர்) உருக்குலைந்து போய் மரணத்தைத் தழுவியது வரலாற்று சோகம்.
அப்போது மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அன்றைய பிரதமர் சந்திரசேகர் அரசு, மறு நாளிலேயே (22 மே 1991) ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. டி.ஆர்.கார்த்திக்கேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து துப்பு துலக்கப்பட்டது.
ராஜீவ் கொலையை அரங்கேற்றிய சதிகாரி தாணு, ராஜீவ்காந்தியுடனும், மற்றவர்களுடனும், தான் நடத்திய குண்டுவெடிப்பில் பலியானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்கள் ஒருவர் இருவரலல்ல, முருகன் என்ற ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், பேரறிவாளன் உள்பட மொத்தம் 41 பேர். 15 பேர் விசாரணை காலத்திலேயே இறந்து விட்டனர்.
எஞ்சிய 26 பேர் மீதான வழக்கை விசாரிக்க சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தடா கோர்ட்டு அமைக்கப்பட்டது. இந்த கோர்ட்டில்தான் 26 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து 1998-ம் ஆண்டு, ஜனவரி 28-ந் தேதி தடா கோர்ட்டு நீதிபதி நவனீதம் தீர்ப்பு அளித்தார்.
இது இந்தியாவில் பெரும் புயலைக்கிளப்பியது.
இந்த வழக்கின் விசாரணையானது, மூடப்பட்ட கோர்ட்டு அரங்குக்குள் நடத்தப்பட்டதற்கு எதிராக மனித உரிமை குழுக்கள் அப்போது போர்க்குரல் உயர்த்தின.
தடா கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தமட்டில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது. தண்டனை பெற்றவர்கள் நேராக சுப்ரீம் கோர்ட்டில்தான் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். அதுதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் நடந்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.குவாத்ரி ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. 1999-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி இதில் தீர்ப்பு வந்தது.
நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், சுபா சுந்தரம், சண்முக வடிவேல், பாக்கியநாதன், பத்மா, கனகசபாபதி, விக்கி என்ற விக்னேஷ்வரன், ஆதிரை, சங்கர், சாந்தி, மகேஷ் என்ற சுசீந்திரன், தனசேகரன், விஜயானந்தன், சிவரூபன், ரங்கநாத், இரும்பொறை, விஜயன், ராஜசூர்யா என்ற ரங்கன், செல்வலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் ஆவார்கள்.
நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரும் தூக்கு கயிற்றில் இருந்து தப்பிப்பதற்காக இதுவரை யாரும் நடத்தியிராத அளவுக்கு நீண்டதொரு சட்டப்போராட்டம் நடத்தினர்.
1999-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8-ந் தேதி நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது தீர்ப்பு வந்தது.
3 நீதிபதிகள் அமர்வில் 3 பேரும் தனித்தனி தீர்ப்பு அளித்தார்கள். நீதிபதிகள் வாத்வாவும், காதரியும் 4 பேரது மறு ஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். நீதிபதி தாமஸ், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்தார். ஆனாலும் 3 பேரில் 2 பேர் பெரும்பான்மை தீர்ப்பு உறுதியானது. 4 பேரின் தூக்கும் உறுதியானது.
1999 நவம்பர் 5-ந் தேதி 4 பேரையும் தூக்கில் போட முதல்முறையாக ஏற்பாடு ஆனது. அதற்கான உத்தரவும் வேலூர் மத்திய சிறைக்கு சென்றது.
ஆனால் 4 பேரும் கவர்னருக்கு கருணை மனு அனுப்பினர். அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி, அவர்களது கருணை மனுவை நிராகரித்தார். அதைத் தொடர்ந்து 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இதனால் தூக்கு நிறுத்தப்பட்டது.
மரண நிழலில் இருந்து சற்றே அவர்கள் அப்போது தப்பித்தனர்.
மேலும் கவர்னர் தங்கள் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 4 பேரும் முறையீடு செய்தனர். அதை நீதிபதி கே.கோவிந்தராஜன் விசாரித்து, மாநில அமைச்சரவையின் ஆலோசனையைப் பெறாமல் 4 பேரின் கருணை மனுவை கவர்னர் நிராகரித்தது செல்லாது என 1999 நவம்பர் 5-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.
அதைத் தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி விவாதித்து, நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது என பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்று 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி கவர்னர் பாத்திமா பீவி உத்தரவிட்டார்.
இதனால் நளினியின் தலை, தூக்குக்கு தப்பியது.
ஆனாலும் அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி அப்போது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்காத நிலையில், அவரது மனுவை ஐகோர்ட்டு 2010 ஏப்ரல் 6-ந் தேதி தள்ளுபடி செய்தது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது கருணை மனுவை ஜனாதிபதி பிரதிபா பட்டீல் நிராகரித்து விட்டார் என 2011 ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தகவல் வெளியானது. இதையடுத்து மூவரும் 2011 செப்டம்பர் 9-ந் தேதி வேலூர் சிறையில் தூக்கில் போடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடு நடந்தது. ஆனால் மூவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க, தூக்கில் போட 8 வாரங்களுக்கு தடை விதித்து நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா அமர்வு உத்தரவு போட்டது.
3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 2011 ஆகஸ்டு 30-ந் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். 3 பேரும் தூக்கில் போடப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி 2012 மே மாதம் 1-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் அமர்வு விசாரித்து 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
3 பேரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432, 433 தந்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுக்கலாம் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் 3 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.
ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது விடுதலைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு சென்றது.
அதை தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமர்வு ஏற்று 3 பேர் விடுதலைக்கு தடை விதித்து 2014 பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டது.
3 பேரது மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்தது. நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த ஒரு வாரத்தில் (2014 பிப்ரவரி 27) உத்தரவிட்டது.
3 பேரது மரண தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதைத் தள்ளுபடி செய்து 2014 ஏப்ரல் 1-ந் தேதி உத்தரவிட்டது. (அதைத் தொடர்ந்து மத்திய அரசு தாக்கல் செய்த நிவாரண மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது.)
7 பேரது விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்து அதே ஆண்டின் ஏப்ரல் 25-ந் தேதி உத்தரவிட்டது.
அதில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் நீதிபதிகள் லலித்தும், சப்ரேயும் மாநில அரசுக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என தீர்ப்பு கூறினர். பெரும்பான்மை தீர்ப்புபடி, மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு 2015 டிசம்பர் 2-ந் தேதி வந்தது.
7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசை தமிழக அரசு நாடியது. ஆனால் மத்திய அரசு மறுத்து விடவே, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.
அதை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்து, இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு 2018 ஜனவரி 23-ல் உத்தரவிட்டது.
7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு 2018 செப்டம்பர் 6-ந் தேதி உத்தரவிட்டது.
அதன்படி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ல் கூடி, 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்தது.
இதற்கு மத்தியில் 7 பேரின் விடுதலைக்கு எதிராக ராஜீவ் காந்தியுடன் பலியான 3 பேரது குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு 2019 மே 9-ந் தேதி தள்ளுபடி செய்தது.
7 பேர் விடுதலையில் ஜனாதிபதிக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இது 7 பேர் விடுதலையில் சிக்கலாக மாறியது.
இதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்தது.
அரசியல் சாசனம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே மாதம் 18-ந் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்து உத்தரவிடுமாறு நளினி, ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு, சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து நளினி, ரவிச்சந்திரன் மட்டுமல்லாது முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் என 6 பேரையும் விடுதலை செய்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பும், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு பயன்படுத்திய அரசியல் சாசனம் பிரிவு 142-ஐ பயன்படுத்தித்தான் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டிருந்த 6 பேரை வெளியே கொண்டு வந்துள்ள சுதந்திர தீர்ப்பு!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்