என் மலர்
இந்தியா
காங்கிரஸ் எம்.பி. இருக்கையில் பணக்குவியல்- விசாரணை நடத்த அவைத்தலைவர் உத்தரவு
- காங்கிரஸ் எம்.பி இருக்கையின் கீழ் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் பாராளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியது. குளிர்கால கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
அப்போது மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி இருக்கையின் கீழ் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக அவையில் தெரிவிக்கப்பட்டது
இதுகுறித்து அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கூறியதாவது:-
நேற்று சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் சபையில் நடக்கும் வழக்கமான சோதனையின் போது நடந்ததை நான் உறுப்பினர்களுக்கு இங்கு தெரிவிக்கிறேன். தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் சிங்விக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் இருந்து ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார்கள். அவை தலைவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால் மேல்சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
அப்போது மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கூறும் போது,விசாரணை முடிந்து, சம்பவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வரை, ஒரு உறுப்பினரின் பெயரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, வழக்கமான நெறிமுறையின்படி சபையில் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு இருக்கையில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. உறுப்பினரின் பெயரை தலைவர் கூறக்கூடாது என்று ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்று புரியவில்லை. அவைத் தலைவர் இருக்கை எண் மற்றும் அந்த குறிப்பிட்ட இருக்கை எண்ணை வகிக்கும் உறுப்பினரை சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அவைத் தலைவரின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதே போன்று உறுப்பினர்கள் எழுப்பிய கவலைகளும் மிகவும் உண்மையானவை என்றார்.
காங்கிரஸ் எம்.பி இருக்கையின் கீழ் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அபிஷேக் சிங்வி திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறும்போது, இதுபோன்ற குற்றச்சாட்டை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.
நான் நேற்று மேல்-சபைக்கு செல்லும்போது ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் சென்றேன். மதியம் 12:57 மணிக்கு பாராளுமன்றத்தை அடைந்தேன்.1 மணிக்கு அவைக்கு சென்றேன். பின்னர் 1:30 மணி வரை கேண்டீனில் அமர்ந்திருந்தேன். நேற்று நான் பாராளுமன்றத்தில் இருந்த நேரம் 3 நிமிடங்கள்தான். கேண்டீனில் அமர்ந்திருந்தது 30 நிமிடங்கள்.
இது போன்ற விஷயங்களில் கூட அரசியல் எழுப்பப்படுவது எனக்கு வினோதமாக இருக்கிறது. எந்த இருக்கையிலும் எதையும் வேறு யாராவது வைக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை இருக்க வேண்டும். இருக்கையைப் பூட்டி, சாவியை எம்.பி.யால் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய இருக்கை இருக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு நிறுவனங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதுவும் முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றார்.