என் மலர்
இந்தியா
குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்.. மோசடி கும்பல் வலையில் விழுந்த ஆண்கள்
- அனைத்திந்திய கருத்தரித்தல் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி நடந்துள்ளது.
- ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தினர்.
அனைத்திந்திய கர்ப்பமாகும் சர்வீஸ் என்ற தலைப்பில் மோசடி செய்யும் கும்பலை பீகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
பீகாரின் நவாடா மாவட்டத்தின் நர்டிகஞ்ச்சில் உள்ள கஹுவாரா கிராமத்துக்கு அருகே ஒரு கிடங்கில் இருந்து இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் சைபர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் என மூன்று பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர், குற்றவாளிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
திருமணமான குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கும் சேவை, 'ப்ளே பாய் சர்வீஸ்' உள்ளிட்ட பிற கவர்ச்சிகரமான சேவைகளை அறிமுகப்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர்.
இந்த கும்பல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பலரிடம் மோசடி செய்துள்ளது. இதுவரை ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையை போலீசார் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் கூறுகையில், மோசடி செய்பவர்கள் பல்வேறு மாநிலங்களில் தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டனர். பேஸ்புக் விளம்பரங்களையும் வெளியிட்டனர்.
பான் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற பல ஆவணங்களையும், பதிவு என்ற பெயரில் நபரின் செல்ஃபியையும் கேட்பார்கள்.
குழந்தை பெற முடியாத பெண்களை வெற்றிகரமாக கருவூட்டுவதுதான் வேலை. அதில் வெற்றி பெற்றால் ரூ. 10 லட்சம், தவறினாலும் ரூ.50,000 தருவதாக பொய்யான உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர்.
இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ரூ.500 முதல் ரூ.20,000 வரை வசூலித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 ஸ்மார்ட்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிலுருந்து வாட்ஸ்அப் சாட்கள், ஏமாந்தவர்கள் புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று போலீஸ் தெரிவித்தது. கடந்த ஆண்டும் பீகாரில் இதே கான்சப்டில் செயல்பட்ட மற்றொரு சைபர் மோசடி கும்பல் சிக்கியது குறிப்பிடத்தக்கது.