என் மலர்
இந்தியா
தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு- அஸ்வினி வைஷ்ணவ்
- புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
- கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. மொத்தமாக 2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7,564 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 97% ரயில் வழித்தடங்கள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. விரைவில் முழுவதும் மின்மயமாக்கப்படும். கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 50 நமோ பாரத் புதிய ரெயில்கள் இயக்க இந்த பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய ரெயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் தெற்கு ரெயில்வேயில் இணைக்கப்பட உள்ளது.
பாம்பன் ரெயில்வே பாலம் ஒரு தனித்துவமானது. பாம்பன் பாலத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. பாலம் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தனுஷ்கோடி ரெயில்வே திட்டம் மத்திய அரசு தரப்பில் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால், மாநில அரசு தரப்பில் அதனை செயல்படுத்த விருப்பப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.