search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    எங்களை காப்பாற்றுங்கள் கதறிய ஆஸ்பத்திரி பெண் ஊழியர்
    X

    "எங்களை காப்பாற்றுங்கள்" கதறிய ஆஸ்பத்திரி பெண் ஊழியர்

    • ஏராளமானோர் குடும்பமாக வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
    • தப்பித்து வர முடியாமல் மரண ஓலம் எழுப்பினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.

    பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். உயிர் தப்பிய நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து வர முடியாமல் மரண ஓலம் எழுப்பினர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

    யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று தவித்தபடி இருந்துள்ளனர். உயிர் பிழைப்பதற் காக அவர்கள் நடத்திய போராட்டம் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.

    வயநாடு மேப்பாடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய நீத்து என்ற பெண், தான் வேலை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட தகவலை தெரிவித்திருக்கிறார்.

    அப்போது அவர், "நான் எனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கி உள்ளேன். எனது வீட்டை சுற்றி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கள் வீட்டை சகதி சூழ்ந்திருக்கிறது. தயவுசெய்து எங்களை காப்பாற்ற யாரைவது அனுப்புங்கள்" என்று கதறி உள்ளார்.

    இதையடுத்து நீத்து பணிபுரிந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர் வீடு இருந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

    ஆனால் அவரது வீடு இருந்த பகுதிக்கு செல்லக்கூடிய பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தது. இதனால் நீத்து வீடு இருந்த பகுதிக்கு ஆஸ்பத்திரி ஊழியர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில் நீத்து ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது தங்களது வீட்டின் பின்புறம் தண்ணீர் கொட்டுவதாகவும், ஆற்றை தங்களது வீட்டை நோக்க திருப்பி விட்டது போல் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாகவும் கூறி எப்படி யாவது காப்பாற்றுங்கள் என கூறி கதறி இருக்கிறார்.

    ஆனால் சிறிது நேரத்தில் நீத்து இருந்த அவரது வீட்டின் சமையல் அறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். போன் பேசுவதற்காக வீட்டின் சமையல் அறைக்கு வந்தபோது அந்த பரிதாப சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    நீத்துவின் கணவர் ஜோ ஜோ, 5 வயது மகன் மற்றும் பெற்றோர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

    நீத்து வீடு இருந்த பகுதியில் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தும் பலியாகி விட்டனர். மேலும் ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர்.

    Next Story
    ×