search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீட் மறு தேர்வு நடத்தாதது ஏன்?- விளக்கம் அளித்த சுப்ரீம் கோர்ட்
    X

    நீட் மறு தேர்வு நடத்தாதது ஏன்?- விளக்கம் அளித்த சுப்ரீம் கோர்ட்

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வினாத்தாள்களை மையங்களுக்கு எடுத்து செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடந்தது. இந்த தேர்வில் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆள்மாறாட்டம் உள்ளிட்டவை நடந்ததாகவும் சர்ச்சையானது. இது தொடர்பாக மாணவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியது.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீட் தேர்வில் ஒட்டுமொத்த விதிமுறைகளை மீறும் வகையில் முறைகேடு நடைபெறவில்லை. 20 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த நிலையில் நீட் மறு தேர்வு நடத்தாதது ஏன்? என்பது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரிவான விளக்கத்தை கொடுத்தனர்.

    மேலும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கூடுதல் வழிகாட்டுதல்களை நிபுணர் குழுவினருக்கு நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன்படி,

    நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்றவற்றை தடுக்க சைபர் செக்யூரிட்டி நவீன தொழில் நுட்பத்துடன், இணைய பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    வினாத்தாள்களை தயாரிப்பது முதல் சரிபார்ப்பது வரை கடும் பரிசோதனைகளை உறுதி செய்ய வேண்டும். வினாத்தாள் கையாளுதல், சேமித்தலை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

    வினாத்தாள்களை அந்தந்த மையங்களுக்கு எடுத்து செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

    வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தேசிய தேர்வு முகமை சரி செய்ய வேண்டும். கல்வி அமைச்சகம் ஒரு மாதத்தில் நடைமுறைபடுத்தப்படும் திட்டத்தை உருவாக்கி 2 வாரங்களுக்கு பிறகு அந்த முடிவை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

    தேர்வு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு 2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தனது பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×