என் மலர்
இந்தியா
நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்: மணிப்பூர் விவகாரத்தில் கடுமை காட்டிய உச்சநீதிமன்றம்
- பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உறுதி
- மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
சென்ற மே மாதம் மணிப்பூரில் இரு இனத்தவருக்கிடையே மோதல் உருவானது. பிறகு, இதுபெருங்கலவரமாக மாறியது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது. வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் தாக்கப்பட்டன, வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அதிகாரபூர்வமாக இதுவரை 142 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் சுமார் 54 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இம்மாநில கலவரம் தொடர்பாக மே மாதம் நடைபெற்றதாக சொல்லப்படும் ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் ஒரு அதிர்ச்சி தரும் காட்சி இருந்தது.
அந்த வீடியோவில் ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் இருபெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள். பிறகு அவர்கள் மானபங்கபடுத்தப்படுகிறார்கள்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த வீடியோ காட்சிகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தங்களது வேதனையை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:-
இது எங்களை மிகவும் மனதளவில் பாதித்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் உடனடியாக தலையிட்டு அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, அதனை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
நாங்கள் அரசாங்கங்களுக்கு அவகாசம் அளித்து காத்திருக்கிறோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
இவ்வாறு அந்த பெஞ்ச் கூறியிருக்கிறது.