என் மலர்
இந்தியா
குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை- காதலி கிரீஷ்மாவிற்கு மரணதண்டனை விதிப்பு
- கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
- தனது திருமணத்துக்கு இடைஞ்சலாக இருப்பார் என கருதிய கிரீஷ்மா, காதலனை கொலை செய்ய முடிவு செய்தார்.
கேரள மாநிலம் பாற சாலை மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருக்கு, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி ஷாரோன் ராஜூக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 11 நாட்களுக்கு பிறகு இறந்தார்.
நல்ல உடல்நிலையில் இருந்த தனது மகன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதால் தங்களின் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன்ராஜின் பெற்றோர், பாறசாலை போலீசில் புகார் செய்தனர். மேலும் அவனது காதலியான கிரீஷ்மா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
அதனடிப்படையில் பாறசாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கிரீஷ்மாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் காதலன் ஷாரோன் ராஜூக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த கிரீஷ்மா, பின்பு தனது பெற்றோரின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் அதுபற்றி காதலன் ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயிருக்கு உயிராக காதலித்து வந்த ஷாரோன்ராஜ், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் தனது திருமணத்துக்கு இடைஞ்சலாக இருப்பார் என கருதிய கிரீஷ்மா, காதலனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டுக்கு வரவழைத்து விஷம் கலந்த கசாயத்தை கொடுத்து காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.
ஷாரோன்ராஜ் கொலை சம்பவம் கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காதலி கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
மாணவர் ஷாரோன்ராஜ் கொலை வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. அதில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமாரும் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் கிரீஷ்மாவின் தாய் சிந்துவை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், கிரீஷ்மாவிற்கு மரண தண்டனை விதித்து கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும் கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.