search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைப்பு
    X

    ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைப்பு

    • வங்கதேசம் நாடு முன்பு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது.
    • வங்கதேசத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா ஹெலிகாப்டர் மூலம் அந்த நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்துள்ளார்.

    வங்கதேசம் நாடு முன்பு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. 1971-ம் ஆண்டு அந்த நாடு ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் சுதந்திர போராட்டம் நடத்தி தனி நாடாக மாறியது. இதனால் ஷேக் முஜிபுர் ரஹ்மானை வங்கதேசத்தின் தந்தை என்று போற்றுகிறார்கள்.

    அவரது மகள்தான் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் 5-வது முறையாக ஆட்சியில் அமர்ந்த சிறப்பு அவருக்கு உண்டு. ஆனால் வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அவருக்கு எதிராக மாறியது.

    வங்கதேசத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு மட்டும் 30 சதவீதம் வாய்ப்பு கொடுக்கப்படுவதால் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக மாணவர்கள், இளைஞர்கள் கருதினார்கள்.

    இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாதம் அவர்களது போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

    இந்த நிலையில் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து வங்கதேச சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனால் மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே நடந்த போராட்டத்தில் கைதான சுமார் 11 ஆயிரம் மாணவர்கள், இளைஞர்களை அரசு விடுவிக்காததால் நேற்று முன்தினம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.


    இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஷேக் ஹசீனா சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் மாணவர்கள் ஏற்கவில்லை. நேற்று அவர்கள் வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் மிக பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தினார்கள்.

    இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா தன்னுடன் தனது தங்கை ஷேக் ரெஹனாவுடன் ஹெலிகாப்டரில் டாக்காவில் இருந்து புறப்பட்டு வந்தார். அவரது ஹெலிகாப்டரை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து பாதுகாப்பு வழங்கியது. முதலில் அவரது ஹெலிகாப்டர் திரிபுரா செல்வதாக கூறப்பட்டது.

    ஆனால் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் வந்து இறங்கியது. இந்த விமானப்படை தளம் டெல்லிக்கு மிக அருகில் இருக்கிறது. ஷேக் ஹசீனாவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் வரவேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றார்.

    ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா டெல்லியில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனராக உள்ளார். அவர் வீட்டுக்கு ஷேக் ஹசீனா சென்றதாக தகவல்கள் வெளியானது. அங்கு தனது பேரக்குழந்தைகளை பார்த்து விட்டு ஷேக் ஹசீனா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    டெல்லியில் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இந்திய அரசு சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது.

    டெல்லியில் ஷேக் ஹசீனா எந்த பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் டெல்லியில் தற்காலிகமாக தங்கியிருக்க மட்டுமே அனுமதி வழங்கி இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஷேக் ஹசீனா இதற்கு முன்பும் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு லண்டனில் தஞ்சம் அடைந்து இருந்தார். இந்த தடவையும் அவர் லண்டனில் தஞ்சம் அடைய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தடவை நிரந்தரமாக லண்டனில் குடியேற அவர் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

    அதற்கு ஏற்ப அவர் இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இங்கிலாந்து அரசு அனுமதி கொடுத்ததும் ஷேக் ஹசீனா லண்டன் புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை அவர் டெல்லியில் தங்கி இருப்பார்.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிர்ப்பாளர்கள் நேற்றும் இன்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை அவரது எதிரிகள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறார்கள்.

    இதற்கிடையே வங்கதேசத்தில் இன்று இடைக்கால அரசும் அமைக்கப்பட்டுஉள்ளது. எனவே அங்கு அமைதி திரும்ப தொடங்கிஉள்ளது.

    Next Story
    ×