search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தென்மேற்கு பருவமழை: கர்நாடகத்தில் ஆறுகளில் வெள்ளம்-வீடுகள் இடிந்தன
    X

    தென்மேற்கு பருவமழை: கர்நாடகத்தில் ஆறுகளில் வெள்ளம்-வீடுகள் இடிந்தன

    • கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.

    விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.

    உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×