search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்யேக லட்டு வழங்கப்படுமா? திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்யேக லட்டு வழங்கப்படுமா? திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

    • சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
    • சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, 'திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்குவது தொடர்பாக ஆலோசித்து அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்‌. இந்த தகவலை வைத்து, சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

    ஆனால் இந்த தகவல் வதந்தி என திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்தி லட்டு காப்புரிமை பெறப்பட்டது என்றும், சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் நீரிழிவு நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சர்க்கரை இல்லாத லட்டு வழங்கினால், பின்னர் வேறு ஏதாவது காரணத்தை வைத்து வேறு சில பக்தர்கள் வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என்றும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

    Next Story
    ×