என் மலர்
இந்தியா

மாட்டிறைச்சிக்கு பின்னால் ஓடுவதை விட மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும்- உச்சநீதிமன்றம்

- அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?
மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற விஷயங்களுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த அரசு முயற்சிக்கலாம் என்று அசாம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021ன் படி இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடங்கள் மற்றும் கோவில்களை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கால்நடைகளை அறுப்பதும், இறைச்சியை விற்பதும் குற்றமாகும். அதன்படி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களிலும் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட்டிறைச்சி கடத்தியதாக இளைஞர் ஒருவர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து அந்த இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அசாம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "போலீசார் வாகன சோதனையில் குற்றம்சாட்டப்பட்ட நபரை பிடித்தனர். அப்போது அவரது வாகனத்தில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அது என்ன இறைச்சி என்பதை அவர் கூற மறுத்துள்ளார். இறைச்சி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எனது தரப்பு நபர், ஒரு கிடங்கின் உரிமையாளர். இறைச்சியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவருடைய வேலை. இவருக்கு அது என்ன இறைச்சி என்று கூட தெரியாது" என்று தெரிவித்தார்.
2 தரப்பு வாதங்களும் கேட்ட உச்ச நீதிமன்றம், "அசாம் மாநில அரசு இதுபோன்று மாட்டிறைச்சி பிரச்சனைகளுக்கு பின்னால் செல்வதை விட்டுவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இறைச்சியை பார்த்த உடனே அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் கூற முடியும்?
அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 8-இன் படி விற்கப்படும் இறைச்சி மாட்டிறைச்சி என்று குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே இந்த விதியைப் பயன்படுத்த முடியும் என்று கூறிய உச்சநீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது.