search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எங்கள் அரசு மீது காங்கிரசார் கூறும் ஊழல் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது: பசவராஜ் பொம்மை
    X

    எங்கள் அரசு மீது காங்கிரசார் கூறும் ஊழல் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது: பசவராஜ் பொம்மை

    • ஊழல் புரிவதில் காங்கிரஸ் கங்கை நதியை போன்றது.
    • லோக்அயுக்தாவை மூடிய புண்ணிவான்கள் தான் காங்கிரசார்.

    பெங்களூரு :

    நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பிறகு அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார அணிவகுப்பு வாகனத்திற்கு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. முதலில் அனுமதி நிராகரிக்கப்பட்டாலும், நாங்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. கடந்த 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தது. அப்போது கர்நாடகத்தின் அலங்கார வாகனத்திற்கு அனுமதி நிராகரிக்கப்பட்டது.

    தற்போது மத்திய அரசை குறை கூறும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அலங்கார வாகனத்திற்கு அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகம் கலந்து கொண்டது. கடந்த முறை விருது வென்ற மாநிலங்களுக்கு பதிலாக வேறு ஒரு மாநிலத்திற்கு வேறு பிரிவில் அனுமதி அளிக்கலாம் என்ற கருத்து இருந்தது.

    நான் ராணுவம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரிகளுடன் பேசி, கர்நாடகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி பெற்றேன். பத்ம விருதுகள் பெற்ற பெண்களின் சாதனைகளை மையப்படுத்தி அலங்கார ஊர்தியை பத்தே நாட்களில் தயாரித்துள்ளோம். அந்த ஊர்தி மிக அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் உரிமை என்று வருகிறபோது, அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    ஊழல் புரிவதில் காங்கிரஸ் கங்கை நதியை போன்றது. தனது ஊழல்களை மூடிமறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சித்தராமையா லோக்அயுக்தா அமைப்பின் அதிகாரத்தை பறித்தார். ஊழல்களை செய்துவிட்டு தற்போது ஊழலுக்கு எதிராக காங்கிரசார் போராடுவது வேடிக்கையாக உள்ளது. நாங்கள் லோக்அயுக்தாவுக்கு முழு அதிகாரத்தை கொடுத்துள்ளோம்.

    நாங்கள் ஏதாவது ஊழல்களை செய்திருந்தால் அதுபற்றி லோக்அயுக்தாவில் புகார் அளிக்கட்டும். லோக்அயுக்தாவை மூடிய புண்ணிவான்கள் தான் காங்கிரசார். ஆனால் அவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். லோக்அயுக்தாவை முடக்கிய ஏன் என்பது குறித்து காங்கிரசார் பதிலளிக்க வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக 59 ஊழல் புகார்கள் கூறப்பட்டன. ஊழல் தடுப்பு படை மூலம் விசாரணை நடத்தி, அந்த புகார்களில் உண்மை இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. எங்கள் மீது காங்கிரஸ் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகள் வேடிக்கையாக உள்ளது. பிரதமர் மோடி உலக தலைவர். அவரை விமர்சிக்கும் தகுதி காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை. அவர் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு இருக்கும் செல்வாக்கு அளவுக்கு வேறு எந்த தலைவருக்கும் இல்லை. அத்தகைய தலைவரை குறை சொன்னால் மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். அவரை விமர்சிப்பது என்பது ஆகாயத்தை பார்த்து குரைப்பது போன்றது.

    அதனால் காங்கிரசார் என்ன வேண்டுமானாலும் குறை சொல்லட்டும், மக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது. அந்த ஆதரவு மேலும் அதிகரிக்கும். காங்கிரசாரின் போராட்டம் குறித்து போலீசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    Next Story
    ×