search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விமானங்களுக்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டலில் மகாராஷ்டிரா வாலிபருக்கு தொடர்பு... தப்பி ஓடியவரை போலீஸ் தேடுகிறது
    X

    விமானங்களுக்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டலில் மகாராஷ்டிரா வாலிபருக்கு தொடர்பு... தப்பி ஓடியவரை போலீஸ் தேடுகிறது

    • இ-மெயிலில் மிரட்டல் அனுப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கிய பிறகு ஜகதீஷ் உய்கே தலைமறைவாகி விட்டார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு ஜகதீஷ் உய்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் சில நாட்களாக உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. கடந்த 2 வாரங்களில் 400 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இந்த மிரட்டல்கள் இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்களில் வந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக மைனர் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் பின்னணியில் மகாராஷ்டிராவை சேர்ந்த வாலிபர் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள கிழக்கு விதர்பா பகுதியை சேர்ந்த ஜகதீஷ் உய்கே (வயது 35) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் பயங்கரவாதம் குறித்து புத்தகம் எழுதியுள்ளார் என்றும், பிரதமர் அலுவலகம், மத்திய ரெயில்வே அமைச்சர், மகாராஷ்டிரா முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, விமான அலுவலகங்கள், டி.ஜி.பி., ரெயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு ஜகதீஷ் உய்கே இ-மெயில்களை அனுப்பியதாகவும் தேசிய பாதுகாப்பு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தனக்குள்ள அறிவு குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல் ரகசிய பயங்கரவாதக் குறியீடு பற்றிய தகவலை முன்வைக்க வாய்ப்பளிக்காவிட்டால் துணை முதல்-அமைச்சரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.

    இ-மெயிலில் மிரட்டல் அனுப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கிய பிறகு ஜகதீஷ் உய்கே தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, கடந்த 2021-ம் ஆண்டு ஜகதீஷ் உய்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×